நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணாமாக, திண்டுக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர், தூத்துக்குடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. கனமழை அதிகமாக இருப்பதால், தனியார் பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளும் இன்று நடத்தப்பட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளையும் இன்று திறக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளும் புயல், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வாரம் முழுவதும் இயங்கவில்லை.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
எனினும், வரும் திங்கள்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இன்று மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடல் மட்டத்திலிருந்து 4.5கிமீ உயரத்தில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.