
3,664 காலிப் பணியிடங்கள்; தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழக காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மொத்தம் 3,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய செப்டம்பர் 25ஆம் தேதி ஒரு நாள் அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
தேர்வு விபரங்கள்
எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 2,833 இடங்கள், சிறைக்காவலர்களுக்கான 180 இடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 631 இடங்கள் அடங்கும். முன்னதாக, 1,299 உதவி ஆய்வாளர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய அறிவிப்பு, காவல்துறையில் சீருடைப் பணியாளர்கள் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும், விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.