ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்தேர்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்ட இந்த தேர்வில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழக்கமாக, இதுபோன்ற தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வெளியிட்டுவிடும்.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்
வழக்கமாக மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றாலும், இந்த போட்டித் தேர்வுகளில் மிகவும் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றனர். இதனால் தொழில்நுட்ப உதவியோடு தேர்வுத் தாள்களை திருத்தினாலும், அனைத்து தேர்வுத் தாள்களையும் திருத்தி முடிக்கவே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால், டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து வந்துள்ள தகவலின்படி, ஜூன் மாத தொடக்கத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025 ஜனவரி அல்லது அதற்கு பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் விரைவில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.