
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29இல் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29, 2025 அன்று தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து டிஎன்பி எஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்) தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இந்த கலந்தாய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள்
தேர்வர்களுக்கான அழைப்புக் கடிதம்
தேர்வர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது தவிர, அழைப்புக் கடிதம் ஒவ்வொரு தேர்வருக்கும் அஞ்சல் மூலம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்படாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாறாக, விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் (இமெயில்) மூலம் மட்டுமே கலந்தாய்வு விவரங்கள் தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.