Loading...
TNPSC துறைத் தேர்வுகள் டிசம்பர் 2026 அறிவிப்பு: விண்ணப்பத் தேதி, தேர்வு அட்டவணை மற்றும் முக்கிய விதிமுறைகள்
துறைத் தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது TNPSC

TNPSC துறைத் தேர்வுகள் டிசம்பர் 2026 அறிவிப்பு: விண்ணப்பத் தேதி, தேர்வு அட்டவணை மற்றும் முக்கிய விதிமுறைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2026
04:44 pm

செய்தி முன்னோட்டம்

TNPSC சார்பில் டிசம்பர் 2026-க்கான துறைத் தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணி வரன்முறைக்கு மிக முக்கியமான இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 நாட்களுக்கு இரண்டு அமர்வுகளாக தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதன்படி, கணினி வழியிலான தேர்வுகள் ஜனவரி 31, 2027-பிப்ரவரி 4, 2027 வரையும், விரிந்துரைக்கும் வகைத் தேர்வுகள் பிப்ரவரி 5, 2027-பிப்ரவரி 8, 2027 வரையும் நடத்தப்பட உள்ளன. தினமும் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

விதிமுறைகள்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஒருமுறைப் பதிவு விதிமுறைகள்

துறைத் தேர்வுகளுக்கு இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை ஒருமுறைப் பதிவில் (OTR) முறையாகப் பதிந்திருக்க வேண்டும் என்பதோடு, ஆதார் எண்ணையும் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.

பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அல்லது பணிபுரியும் மாவட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், முதலில் ஒருமுறைப் பதிவில் மாற்றம் செய்த பிறகே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்; இருப்பினும், கட்டணம் செலுத்திய தேர்வுக் குறியீட்டு எண்ணை நீக்கினால் அத்தொகை திருப்பித் தரப்படமாட்டாது.

இறுதி நாளுக்குப் பிறகு எவ்வித திருத்தக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்வுக் கட்டணம்

இணையவழிப் பரிவர்த்தனை எச்சரிக்கை

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.200 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.30 என மொத்தம் ரூ.230 செலுத்த வேண்டும்.

இக்கட்டணத்தை இணையவங்கி, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வாயிலாக மட்டுமே செலுத்த இயலும்.

கட்டணம் செலுத்தும் போது இணையப் பக்கத்தில் 'Back' அல்லது 'Refresh' பொத்தான்களை அழுத்தாமல் பரிவர்த்தனை முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை கட்டணம் செலுத்தப்பட்டால் அத்தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி ஜனவரி 25, 2027 முதல் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT