Loading...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய திட்டம்: சென்னை, திருவள்ளூரில் 700+ வீடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி
வீடு இல்லாத ஏழைகளுக்காக வீட்டு வசதி வாரியம் மூலம் 700-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய திட்டம்: சென்னை, திருவள்ளூரில் 700+ வீடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
01:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் ஏழை எளிய மக்கள், விதவைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) பிரம்மாண்ட புதிய குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான நிலங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டி, குறைந்த விலையிலும் வாடகை அடிப்படையிலும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கட்டுமானங்களை வலுவாகவும் குறைந்த செலவிலும் அமைப்பதை உறுதிசெய்யக் கட்டடக்கலை ஆலோசகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது.

குடியிருப்பு

பகுதி வாரியாக அமையவுள்ள புதிய குடியிருப்புகள்

இத்திட்டத்தின் கீழ் சென்னையின் மையப்பகுதியான புரசைவாக்கத்தில் 5.53 ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 உயர்தரக் குடியிருப்புகளும், நெற்குன்றத்தில் 3.35 ஏக்கர் பரப்பளவில் 228 பன்னடுக்குக் குடியிருப்புகளும் கட்டப்படவுள்ளன.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கத்தில் 1.20 ஏக்கர் நிலத்தில் 112 பன்னடுக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதுதவிர, ஓமந்தூரார் அரசு வளாகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக 76 வாடகைக் குடியிருப்புகளும், அமைந்தகரை, தாரம்பாக்கம், சோழம்பேடு மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக (EWS) ஏழைகள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளித்து 215-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரரின் குடும்பத்தில் யாருடைய பெயரிலும் சொந்த வீடு இருக்கக்கூடாது.

18 வயது நிரம்பிய நபராக இருப்பதோடு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (BPL) பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அதேவேளையில், ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி அல்லது ஜிஎஸ்டி செலுத்துவோர், இரண்டு, மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், வீட்டில் குளிர்சாதனப் பெட்டி மற்றும் தொலைபேசி வைத்திருப்பவர்கள், ₹50,000-க்கு மேல் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு கொண்டவர்கள் மற்றும் 2.5 ஏக்கருக்கு மேல் பாசன நிலம் வைத்துள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

ADVERTISEMENT

மானியம்

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தின் கீழ் வீடு பெறுபவர்களுக்குக் கடன் மற்றும் மானியச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வட்டி மானியமும், அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரை மானியமும் 5 வருடத் தவணைகளில் வழங்கப்படும்.

மேலும், ரூ.12 லட்சம் கடன் பெற்றால் PMAY திட்டத்தின் கீழ் ரூ.2.3 லட்சம் மானியமாகக் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகைக்கு மட்டுமே தவணை செலுத்த வேண்டியிருக்கும்.

தகுதியுடைய பயனாளிகள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இணையவழியிலோ அல்லது வங்கிகள் மற்றும் அரசு சேவை மையங்கள் மூலமாக நேரடியாகவோ தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT