மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்
இரு தினங்களுக்கு முன்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு.,"ஆப்பிரிக்க நாடுகளுக்கும்,தென்அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலை தடுப்பதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதியாகும். இந்த ஊசி போட்டுச்சென்றால் மட்டுமே விமான நிலையங்களில், அந்த நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அதேபோல் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும்போதும் அந்த தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்" என்றார்.
"தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி இல்லை"
அதோடு சுகாதாரத்துறை அமைச்சர், "கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலைய நிர்வாகம் அனுமதிப்பதில்லை" எனத்தெரிவித்தார். "அதனால், கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகம், சென்னை துறைமுகத்தில் உள்ள மருத்துவமையம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம் என தடுப்பூசி போடப்படும் இடங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு முழுநேரமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்" என்று கூறினார்.