Page Loader
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2025
08:21 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், இவை அனைத்தும் குறைந்தபட்ச வீரியமுள்ள வைரஸ் தொற்றுகள் என்பதால், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாநிலங்களில் -குறிப்பாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா -சமீபத்தில் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும், கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளுக்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை

தமிழக பொது சுகாதாரத்துறை கூறுவது என்ன?

இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர்,"அந்த முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடனடி பிரச்சனைகள் இருந்தன. கொரோனா வைரஸ் காரணமாக அவர் உயிரழக்கவில்லை. இது இணை நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணம்." எனக்கூறியுள்ளார். இந்நிலையில், மாநிலத்திலிருந்து 19 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகளாக இருப்பது கண்டறியப்பட்டது. புதிய வகை வைரஸ்கள் அல்லது அதிக வீரியமுள்ள தொற்றுகள் இதுவரை கண்டறியப்படவில்லை. "தற்போதைய நிலையில், மக்களுக்கு எந்தவித பதற்றமும் தேவையில்லை. தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும்போது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். கட்டுப்பாடுகள் அல்லது தனிமைப்படுத்தல் தேவைப்படாத நிலைதான் தற்போது நிலவுகிறது," என சுகாதாரத்துறை உறுதியளித்துள்ளது.