6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த ஆண்டு மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 525 என்று கூறிய அன்பில் மகேஷ், தமிழக பாடத்திட்டத்தை குறைசொல்பவர்களுக்கு இதுவே சான்று எனத் தெரிவித்தார். மேலும், இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் 1,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி
மத்திய அரசு நிர்ணயித்துள்ள 20 நெறிமுறைகளில் 18 நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்தியாவிற்கே பள்ளிக் கல்வியில் தமிழகம் மற்றும் கேரளா முன்னோடி மாநிலங்களாக உள்ளன என அன்பில் மகேஷ் கூறினார். ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு படிப்பை கொடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். மேலும், இந்த ஆண்டு நவம்பருக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு மற்றும் ஹைடெக் லேப் ஆகியவை அமைக்கும் மணி முழுமையாக முடிக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார்.