இல்லத்தரசிகளுக்கு ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தின் தற்போதைய கள நிலவரங்கள் மற்றும் மறுசீரமைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி இத்திட்டம் குறித்து பேசியதைத் தொடர்ந்து, இத்தலைப்பு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 தேர்தல் வாக்குறுதி
'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' முதல் 2026 தேர்தல் வாக்குறுதி வரை
முந்தைய திமுக ஆட்சியில் 2023 செப்டம்பர் 15 அன்று "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" தொடங்கப்பட்டு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 2025-இல் இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்த்தப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, த.வெ.க தலைவர் விஜய் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்.
மே 2026 தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார்.
திட்டத்தைச் சீரமைக்கும் வரை பயனாளிகளுக்கு பழைய ₹1,000 தொகையே தடையின்றித் தொடர அவர் உத்தரவிட்டிருந்தார்.
தீவிர தணிக்கை
புதிய பெயர் 'மகளிர் திட்டம்'
இத்திட்டம் இனி மகளிர் திட்டம் என்ற புதிய பெயரில் அரசாங்கத்தால் விரிவுபடுத்தப்பட உள்ளது.
1.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தும்போது ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையைக் கையாள, நிதித்துறை மற்றும் வங்கித் தரவுகளை முதலமைச்சர் விஜய்யின் நேரடி மேற்பார்வையில் அதிகாரிகள் தீவிரமாகத் தணிக்கை செய்து வருகின்றனர்.
பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உள்ள IFSC குறியீட்டுத் தவறுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளைச் சரிசெய்யும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் ஜெகதீஸ்வரி அளித்த விளக்கத்தின்படி, வங்கித் தரவு சரிபார்ப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் முற்றிலும் சரிசெய்யப்பட்ட உடனேயே, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளின் கணக்கில் ரூ. 2,500 செலுத்தும் பணிகள் முறைப்படி தொடங்கப்படும்.