பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உட்பட, 60 பேர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, தனித்திறனுடன் விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக் வாய்ப்புகளை உருவாக்க 'கனவு ஆசிரியர்' திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 32 ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 22 ஆசிரியர்கள் என, மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் இதில் அடக்கம்.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஆசிரியர்களிடம் உரை நிகழ்த்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் சந்தித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது,"2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம். பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்" என்றார். மேலும்,பள்ளி குழந்தைகளின் பற்களை பாதுகாக்க மாநில அரசு 'புன்னகை' திட்டம் செயல்படுத்தி வருகிறது என்றார். மேலும், மாற்றுத்திறனாளி, ஆட்டிசம் மற்றும் இயன்முறை குறைபாடு உள்ள குழந்தைகளை கண்காணித்து கல்வி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.