RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான 25%ஒதுக்கீட்டில் வேலூர்-புவனேஸ்வரிபேட்டையில் இயங்கி வரும் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சுவேதன் என்னும் மாணவர் சேர்ந்துள்ளார்.
இந்த மாணவனிடமும் அந்த பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் பாடபுத்தகங்களுக்காக 11,977ரூபாய் கட்டணம் செலுத்த கோரி உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பொழுது, எந்த கட்டணமும் இல்லாமல் அந்த மாணவர் தனது படிப்பினை தொடரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கு பின்னரும் அந்த மாணவருக்கு சீருடை, பாடப்புத்தகம் எதுவும் வழங்காத காரணத்தினால் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.
அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் மாணவரின் தந்தை மகாராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம்
தனியார் பள்ளிகள் கட்டணங்களை மாணவர்களிடம் கோர கூடாது என உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தாமல் அவர்கள் கற்க தேவைப்படும் அனைத்து பொருட்களின் கட்டணங்களையும் அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சீருடை, பாடபுத்தகங்களுக்கான கட்டணத்தையும் மாணவர்கள் பயிலும் தனியார் பள்ளிகளில் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அடுத்த 2 வாரங்களுக்குள் இது சம்பந்தமான அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து, தனியார் பள்ளிகளும் கட்டணங்களை மாணவர்களிடம் கோர கூடாது, மாநில அரசிடம் தான் கோரவேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.