
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
மரவள்ளி கிழங்குக்குச் சந்தை நிலைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஜவ்வரிசி விற்பனை அதிகரித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி நடைபெறுகிறது. விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஜவ்வரிசி விற்பனையை ஊக்குவிக்க அரசு தலையீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சங்கரய்யா கூறியதாவது: "2024ம் ஆண்டு நவம்பரில் சேலத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில், ஜவ்வரிசி அடிப்படையிலான 60க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இவை சிறுவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன". "இதையடுத்து, ஜவ்வரிசியை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருளாகப் பயன்படுத்தி, ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளது" எனத் தெரிவித்தார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஜவ்வரிசிக்கு அதிக வர்த்தகம் கிடைக்கும், மரவள்ளி கிழங்கு விவசாயிகளும் கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.