
இல்லம் தேடி வரும் ரேஷன்: பரிசீலனையில் உள்ள தமிழக அரசின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,"ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்தத் திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | தமிழ்நாட்டில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா?
— Sun News (@sunnewstamil) March 19, 2025
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சொன்ன பதில்#SunNews | #TNAssembly | #RationShops pic.twitter.com/RIjtOiPrIb
எதிர்க்கட்சிகள் கேள்வி
நாகர்கோவிலில் நடமாடும் நியாய விலைகடைகள் அமையுமா?
சட்டசபையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி, "ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே, நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை" என்று தெரிவித்தார்.