Loading...
தமிழ்நாடு அரசில் ஆட்குறைப்பு? தேவையற்ற பணியிடங்களை ரத்து செய்ய விஜய் அரசு திட்டம் என தகவல்
தேவையற்ற பணியிடங்களை ரத்து செய்ய விஜய் அரசு திட்டம் என தகவல்

தமிழ்நாடு அரசில் ஆட்குறைப்பு? தேவையற்ற பணியிடங்களை ரத்து செய்ய விஜய் அரசு திட்டம் என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
04:11 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, மாநில அரசின் அநாவசிய செலவினங்களைக் குறைக்கப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாய்மாமன் தங்க மோதிர திட்டம், வெற்றிப் பயண திட்டம் மற்றும் 200 யூனிட் விலையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதியைத் திரட்ட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அரசுத் துறைகளில் கூடுதல் செலவை ஏற்படுத்தும் தேவையற்ற பதவிகளைக் குறைக்கவும், காலியாக உள்ள தேவையற்ற பணியிடங்களை ரத்து செய்யவும் தலைமைச் செயலகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதிச்சுமை

வரவு செலவு கணக்கு மற்றும் அதிகரிக்கும் நிதிச்சுமை

தமிழக அரசுக்கு சொந்த வரி வருவாய், வரி அல்லாத வருவாய் மற்றும் மத்திய அரசின் மானியங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது.

நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.3.50 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.4.05 லட்சம் கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைக் கடந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டும் ஆண்டிற்கு ரூ.77,310 கோடி செலவிடப்படுகிறது.

கடனுக்கான வட்டி மற்றும் மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதால், நிர்வாக ரீதியிலான செலவுகளைக் குறைக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

உயர் பதவிகள்

நிர்வாக சீரமைப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் பதவிகள் குறைப்பு

அறிக்கைகளின்படி வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வணிக வரித் துறை, பதிவுத் துறை உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகள் சீரமைக்கப்படவுள்ளன.

குறிப்பாகத் துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் போன்ற உயரதிகாரிகளின் தேவையற்ற பதவிகளைக் குறைக்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமில்லாத பணியிடங்கள் குறித்து விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தேவையற்ற நிர்வாக செலவுகள் பெருமளவில் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அரசின் தெளிவுபடுத்தல்

பணியாளர்களுக்கு பாதிப்பு உள்ளதா?

அறிக்கைகளின்படி, இந்த ஆட்குறைப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கையால் தற்போதைய அரசு ஊழியர்கள் யாருடைய பணிக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக இருக்கும் தேவையற்ற பணியிடங்கள் மற்றும் கூடுதல் பதவிகள் மட்டுமே ரத்து செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் ஆண்டிற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் மிச்சப்படுத்தப்படும்.

அதேநேரத்தில், மின்சாரப் பத்திரப்பதிவு மற்றும் கனிமங்கள் விற்பனையில் உள்ள முறைகேடுகளைத் தடுத்து, அரசின் கஜானாவை வலுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT