Loading...
ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்! முழு நேர, பகுதி நேரக் கடைகளுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு
முழு நேர, பகுதி நேரக் கடைகளுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு

ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்! முழு நேர, பகுதி நேரக் கடைகளுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
09:28 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேரக் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளையும் முழுமையாக சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சில கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வைக்கப்படும் இடங்கள் போதிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படாததும், பொருட்கள் முறையாக இருப்பு வைக்கப்படாததும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கூட்டுறவுத்துறை இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்

சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் விநியோக நடைமுறை அறிவுறுத்தல்கள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் உத்தரவின் பேரில் நியாயவிலைக் கடைகளின் விற்பனைப் பகுதி, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, அடுக்குகள், தரை, சுவர்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளை சுற்றியுள்ள வெளிப்பகுதிகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இத்தூய்மைப் பணிகளின் காரணமாகப் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தினசரி விநியோகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும், வழக்கம் போல் விநியோகம் நடைபெற வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கண்காணிப்புக் குழுக்கள்

வட்டாரம் வாரியாக பிரத்யேகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு

தூய்மைப் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாகக் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் அடங்கிய பிரத்யேகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் கடைகளுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்யும்.

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் தூய்மைப் பணி செய்வதற்கு முன்னும், பணி நிறைவடைந்த பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கடைகளுக்கான உறுதிச் சான்றுகள் இணையப் பகிர்வு அட்டவணையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆய்வுகள்

தற்செயல் ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள்

மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் தற்செயல் ஆய்வுகள் மேற்கொண்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களிலும் அதிகாரிகள் தங்களது வழக்கமான ஆய்வுகளின்போது கடைகளின் தூய்மையை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்குத் தரமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேருவது முழுமையாக உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT