கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார்: கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து முழுமையாக விசாரிக்க, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககர்லா உஷா தலைமையில் நான்கு பேர் கொண்ட உள் புகார் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி ஒருவர் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி தமிழக அரசிடம் முறைப்படிப் புகார் மனு அளித்திருந்தார். இந்தப் புகாரின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசின் பொதுத்துறை உள் புகார் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Tamil Nadu government formation of a committee to investigate the sexual harassment complaint lodged against TVK MLA Arul Vignesh. pic.twitter.com/dnix45bZBB
— Vignesh Theni (@Vignesh_twitz) November 25, 2026
உறுப்பினர்கள்
விசாரணைக் குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்
இந்த புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா, இ.ஆ.ப., தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ். மதுமதி, இ.ஆ.ப., மற்றும் சட்டத்துறை அரசுச் செயலாளர் பி. சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நடுநிலைமையை உறுதி செய்யும் வகையில் சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த சுனிதா ஜோ வெளிப்புற உறுப்பினராக இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
சட்ட விதிகள்
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013-ன் விதிகளுக்கு உட்பட்டு இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விசாரணை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள் புகார் குழுவானது தனது விசாரணையை 60 நாட்களுக்குள் முழுமையாக நிறைவு செய்து, உரிய மேல் நடவடிக்கைகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள இந்த உயர்மட்ட உள் புகார் குழுவின் விசாரணை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.