அரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு எதிரான போலிச் செய்தி மற்றும் வெறுப்புணர்ச்சிகளை கண்டறிய, தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது. கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை வெளியிட்ட அரசாணையில், 'மத்திய பணிக்குழு உருவாக்கப்பட்டு, உண்மை-சோதனை பிரிவின் கீழ் செயல்படும் என்றும், ஒரு திட்ட இயக்குனரால் வழிநடத்தப்படும்' எனக் கூறப்பட்டிருந்தது. யூட்யூபில், யூடர்ன்(Youturn) என்ற உண்மை கண்டறியும் சேனலை நடத்தி வந்த ஐயன் கார்த்திகேயன், இந்த குழுவின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 80 பேர் கொண்ட குழுவை வழிநடத்துவார். இக்குழு சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அறிக்கை அளிப்பார்கள்.
உண்மை கண்டறியும் குழு எப்படி இயங்கும்?
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு, மத்திய பணிக்குழு உருவாக்கப்படும். உண்மை கண்டறிவதில் இது முக்கிய பங்காற்றுமன அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் "மாவட்ட பகுப்பாய்வு குழு" அமைக்கப்படும். அந்த மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களின் எண்ணிக்கைக்கேற்ப 2 அல்லது 3 பேர் பணியில் இருப்பர். பணி இயக்குனராக இருக்கும் நபருக்கு எழுதுதல் போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, ஒரு திட்ட இயக்குனர் அவருக்கு உதவுவார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த ஒரு இணை இயக்குநர், பொதுப்பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து, பெறப்பட்ட விவரங்களை பகுப்பாய்வு செய்து, உண்மைச் சரிபார்ப்பதற்கும் போலிச் செய்திகள், தவறான/தவறான தகவல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு பற்றிய தகவல்களைச் சேகரிப்பார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தை கிளப்பும் பத்திரிக்கையாளர்கள்
தமிழ்நாடு அரசின் இம்முயற்சிக்கு பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த குழுவிற்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இதனால் எந்த யூட்யூப், பேஸ்புக் சேனல்களையும் முடக்க முடியும். இதன் மூலம் தமிழ்நாடு அரசு, அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை நசுக்குவதற்காகவே இவ்வாறான செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர், ஆகஸ்ட் மாதமே முன்மொழிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, அதன் பின் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், இதை ஏன் அரசு சட்டப்பேரவையில் வைக்கவில்லை என கேட்கிறார்கள்.