3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பினை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு கடந்த 1990ம் ஆண்டு முதல் 2019ம் கல்வியாண்டின் வரையிலான காலங்களில் 2,460 முதுநிலை ஆசிரியர்கள், 300 தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்படி இவர்களுக்கான பணிக்காலம் கடந்த 2021, டிசம்பரோடு நிறைவடைந்தது. இந்நிலையில் அவர்களுக்கான பணிக்காலத்தினை நீட்டிக்குமாறு தமிழக பள்ளி கல்வி இயக்குனர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
2011-2013 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு பள்ளிகள்
அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை அவரது கோரிக்கையினை கவனமாக ஏற்று 2026ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு பள்ளிகளில் கடந்த 2011-2013 கல்வியாண்டில் தற்காலிக அடிப்படையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களது பணிக்காலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு நிறைவடைந்தது என்று தெரிகிறது. இதனிடையே இவர்களுக்கும் பணியிடங்களுக்கான நீடிப்பினை வழங்க கல்வித்துறை இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையினை கவனமாக ஏற்ற அரசு 900 முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 2027ம் ஆண்டு வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.