சிறைவாசிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம்
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தமிழக உள்துறை சிறைப்பிரிவு அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 'வீடியோ கால் பேசும் வசதியினை சிறைவாசிகளுக்காக ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஏற்கனவே சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாருடன் ஆடியோ கால் பேச வாரத்திற்கு 2 முறை அனுமதியளிக்கப்பட்டு வந்த நிலையில். தற்போது அது வாரத்திற்கு 3 முறை என ஒரு மாதத்திற்கு மொத்தம் 10 முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொலைபேசியில் பேசுவதற்கான நேரம் அதிகரிப்பு
அதேபோல் ஒரு முறைக்கு 12 நிமிடங்கள் வரை பேசலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சிறைவாசிகள் தாங்கள் செய்த குற்றத்தின் தாக்கத்தை உணரவும், மன அழுத்தத்தை குறைக்கவும் தங்கள் உறவினர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரோடு பேச அனுமதிக்கப்படுகிறது என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா காலத்திற்கு பிறகு சிறைவாசிகளை அவரது குடும்பத்தார் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், தொலைபேசியில் பேசும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை ஏற்று தமிழக அரசு தற்போது தொலைபேசியில் பேசும் நேரம் மற்றும் எண்ணிக்கையினை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.