தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (TNMRDC) என புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை முறையாக மேம்படுத்தவும், பயன்படுத்தவும் தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (TNMRDC) என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இந்த புதிய நிறுவனத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு 90 சதவீத பங்குகளும், தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (TIDCO) 10 சதவீத பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வணிக வரம்புகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
நோக்கங்கள்
TNMRDC நிறுவனத்தின் முக்கியப் பணிகள்
1957-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், அணுசக்தி கனிமங்களை மத்திய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமே அகழ்ந்தெடுக்க முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள TNMRDC-ன் முக்கியச் செயல்பாடுகள்:
கார்னெட் உள்ளிட்ட மதிப்புமிக்க கடற்கரை தாது மணல் மற்றும் அரிய வகை கனிமங்களை அகழ்ந்தெடுத்தல் மற்றும் பதப்படுத்துதல்.
வழக்கமான கல் குவாரிகளைப் போலத் துளையிடாமல் கடற்கரைப் பகுதிகளிலிருந்து இவை எடுக்கப்படும்.
அகழ்வுப் பணிகளுக்குப் பிறகு, மோனசைட் போன்ற அணுசக்தி கனிமங்கள் இல்லாத மணல் கொண்டு அப்பகுதிகள் நிரப்பப்பட்டு பழைய நிலப்பரப்பு மீட்டெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை
கனிமங்கள் இறக்குமதி & விற்பனை
வெளிநாடுகளிலிருந்து கனிமங்கள் மற்றும் மணலை இறக்குமதி செய்தல், கனிமப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல்.
கடந்த 2023 செப்டம்பரில் அமலாக்கத்துறை சோதனைகளைத் தொடர்ந்து மூடப்பட்ட ஆற்று மணல் குவாரிகளில், 10 முதல் 12 இடங்களில் மீண்டும் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தேவை அதிகரித்துள்ள நிலையில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க, ஆற்று மணல், எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் ஆகியவற்றை விற்பனை செய்யும் அதிகாரமும் TNMRDC நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
தற்போது மத்திய அரசின் IREL மற்றும் கேரள அரசின் KMML ஆகிய நிறுவனங்கள் கடற்கரை தாது மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகமும் இதில் களமிறங்கியுள்ளது.
கனிம வகை
முக்கிய கனிமங்கள் & பயன்பாடுகள்
நியோடைமியம், பிரசியோடைமியம், டிஸ்ப்ரோசியம், டெர்பியம், சமாரியம் உள்ளிட்ட கனிமங்கள் கடற்கரை மணல் பதிவுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்சார வாகன (EV) மோட்டார்கள், காற்றாலை விசையாழிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான உயர் திறன் காந்தங்கள் தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படும்.
இது தவிர அணுசக்தி கனிமம் மற்றும் மோனசைட் அணுசக்தி மற்றும் உத்திசார் துறைகளுக்கு பயன்படும் தோரியத்தின் முதன்மை ஆதாரமாகும்.
2003-ஆம் ஆண்டு வரை ஆற்று மணல் அகழ்வு மற்றும் விநியோகம் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது; அதன்பின் நீர்வளத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.