தமிழக அரசில் IAS அதிகாரிகள் திடீர் மாற்றம்: டி. ரவிச்சந்திரன், கே.எம். சரயு உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை (சிறப்பு - ஏ) சார்பில், முக்கிய IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், அவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கியும் மாநில அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த டாக்டர் டி. ரவிச்சந்திரன் ஐஏஎஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள கே.எம். சரயு ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இப்பதவியில் இருந்த டாக்டர் கே.பி. கார்த்திகேயன் ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டதை அடுத்து இவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பு
நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பொறுப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சி. பழனி ஐஏஎஸ்இன் சேவை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அங்கு கூடுதல் பொறுப்பாக மேலாண்மை இயக்குநராக செயல்பட்டு வந்த டி.பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்க்கு பதிலாக, சி. பழனி ஐஏஎஸ் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக முழுப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (IAS) ஊதிய விதிகளின்படி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய இரு பதவிகளும், சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் அதிகாரங்களைக் கொண்டவையாக கருதப்படும் என்றும் அரசு தனது அரசாணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.