"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி வரை தொடர்ந்த இந்த சோதனையின் இறுதி கட்டமாக, அமைச்சர் பொன்முடியை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, பொன்முடி அவரது காரிலேயே அழைத்து சென்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணையில் இறுதியில், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று (ஜூலை 18) மாலை, அமைச்சர் பொன்முடியும், அவரது மகன் கௌதமும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பொன்முடியிடன் போனில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த அமைச்சர் பொன்முடியை, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த விவகாரத்தை சட்டப்படி எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்முடியிடம் போனில் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விசாரணையில் என்ன நடந்தது என்பதை விலாவரியாக கேட்டறிந்தார் முதல்வர். அதோடு, அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும்,சட்டரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டும் எனவும், மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் கழகம் துணை நிற்கும் என அமைச்சர் பொன்முடியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.