சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு மேலும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
சிகாகோ பயணம்
சான் ஃபிரான்ஸிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முதலமைச்சர் சிகாகோ சென்றார். அங்கேயும் சில பன்னாட்டு நிறுவனங்களுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் படி அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிட்டுள்ளது. அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.