ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பல குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. கட்சி உள்ளிட்ட வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(பிப்.,8) நடக்கிறது, வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் பிப்ரவரி 10ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போட்டியிடும் கட்சியினர் பிரச்சாரம் துவங்கப்பட்டு பெருமளவில் பரபரப்பாக நடந்து வருகிறது.
பிப்ரவரி 19, 20 தேதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு உள்ளிட்ட பலர் ஈரோட்டில் முகாமிட்டு கை சின்னத்திற்கு மிக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் பிப்ரவரி 24ம் தேதி ஈரோடு கிழக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சத்யா நகர், சம்பத் நகர் உட்பட 19 இடங்களில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இவரையடுத்து, திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 19 மற்றும் 20 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.