ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர். இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்காக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்ற இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று(பிப்.,7) ஓபிஎஸ் தரப்பு செய்தியாளர்களை சந்தித்து தங்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் என்றும் தெரிவித்தனர். இதனால், இன்று அதிமுக வேட்பாளாராக தென்னரசு வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக பாடுபட வேண்டும்-தொண்டர்களுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பா.ஜ.க. தனது முழு ஆதரவினை அளிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் மற்றும் கூட்டணி நன்மை கருதி தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.க்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக அரசை வீழ்த்த ஒன்று கூடியிருக்கும் நாம் அனைவரும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும், பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.