வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அண்ணாமலை மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 153, 153A(1)(a), 505(1)(b), மற்றும் 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை கூறிய ஒரு நாளுக்குள் அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"போலியான செய்திகளைப் பரப்பியதற்காக" வழக்கு
சமீபத்தில் தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே பீதியை கிளப்பியது. பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் உட்பட மேலும் நான்கு நபர்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து போலியான செய்திகளைப் பரப்பியதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.