Page Loader
தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை
"சென்சார்ஷிப்"புக்கு எதிரான தனது போராட்டம் என்று பிபிசி ஆவணப்பட இணைப்பை ஷேர் செய்த எம்பி

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை

எழுதியவர் Sindhuja SM
Jan 23, 2023
03:21 pm

செய்தி முன்னோட்டம்

2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி பிரிட்டனில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை வெள்ளிக்கிழமையன்று(ஜன: 20) மத்திய அரசு தடை செய்தது. "பாகுபாடு, உண்மைத்தன்மை இல்லாதது மற்றும் காலனித்துவ மனநிலை அப்பட்டமாக தெரிகிறது." என்று வெளியுறவுதுறை அமைச்சகம் இந்த ஆவணப்படத்தை விமர்சித்திருந்தது. "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அவமதிக்கிறது" என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் ஆகியவை இந்த ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் ட்விட்டரில் தடை செய்ய உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது, இந்த தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தின் இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று(ஜன: 22) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ்

"சென்சார்ஷிப்"புக்கு எதிரான போராட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் பகிர்ந்த இந்த இணைப்பை ஏற்கனவே ட்விட்டர் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எம்பி மஹுவா மொய்த்ராவும் இந்த இணைப்பை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதை அவர் "சென்சார்ஷிப்"புக்கு(தணிக்கை) எதிரான தனது போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார். "இந்தியாவில் யாரும் ஒரு பிபிசி நிகழ்ச்சியை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பேரரசர் மற்றும் பிரபுக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருப்பது வெட்கக்கேடானது" என்று அவர் சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தார். "பிபிசி ஆவணப்படத்தின் எனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியுள்ளது. ஒரு மணிநேர அந்த பிபிசி ஆவணப்படம் பிரதமர் சிறுபான்மையினரை எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்தி இருந்தது" என்று ஓ'பிரைன் சனிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தார்.