பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசு
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், அந்த யூடியூப் வீடியோக்களுக்கான இணைப்புகளைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட ட்வீட்களைத் நீக்குமாறு மத்திய அரசு ட்விட்டரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த ஆவணப்படத்தை ஆய்வு செய்து, இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை மீது அவதூறு பரப்பும் முயற்சி என்று கண்டறிந்துள்ளது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
"இந்த ஆவணப்படம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அவமதிக்கிறது என்றும், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டிற்குள் உள்ள பொது ஒழுங்கை மோசமாக பாதிக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டது" என்று அமைச்சகத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஐடி விதிகளின்(2021) கீழ் இந்த ஆவணப்படத்தை தடை செய்ய யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு உத்தரவிட்டதாகவும் யூடியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் இந்த உத்தரவுகளுக்கு இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. "பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படம் இந்தியாவில் அதிகாரபூர்வகமாக வெளியாகவில்லை. இதை சிலர் வேண்டுமென்றே 'ஆன்டி-இந்தியன்' மனப்பான்மையோடு யூடியூப்பில் பரப்பி வந்தனர். இதை தடை செய்ய யூடியூப் மற்றும் ட்விட்டரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சகத்தின் ஒரு அதிகாரி கூறி இருக்கிறார்.