
பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன:19) வெளியுறவுதுறை அமைச்சகம் விமர்ச்சித்தது.
இந்த ஆவணப்படத்தில் "பாகுபாடு, உண்மைத்தன்மை இல்லாதது மற்றும் காலனித்துவ மனநிலை அப்பட்டமாக தெரிகிறது." என்று வெளியுறவுதுறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி விமர்சித்துள்ளார்.
"இது அந்த ஆவணப்படத்தை பரப்பும் அமைப்புகள் அல்லது தனிநபர்களின் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறெதுவும் இல்லை. இப்படி செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. உண்மையை சொன்னால், இது போன்ற முயற்சிகளுக்கு மதிப்பளிக்க எங்களுக்கு விருப்பமில்லை" என்றும் கூறி இருக்கிறார்.
ரிஷி சுனக்
பிரதமர் மோடிக்கு சார்ப்பாக பேசிய ரிஷி சுனக்
இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்டவைகளுடன் தனக்கு "உடன்பாடில்லை" என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசும் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேசி இருக்கிறார்.
ஒரு எம்பி இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசியதை அடுத்து பிரதமர் சுனக் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
" துன்புறுத்தல்கள் எங்கே எப்படி நடந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால், அந்த மரியாதைக்குரிய மனிதர்(பிரதமர் மோடி) காட்டப்பட்டிருக்கும் விதத்துடன் எனக்கு உடன்பாடு இருக்கிறதா என்பது சந்தேகமே" என்று தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்திற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்பது தெரிவந்ததாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டிருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.