திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைதுசெய்து திருவண்ணாமலை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 2 கொள்ளையர்கள் அரியானாவில் உள்ளதாக தனிப்படை போலீசார் அறிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
இந்நிலையில் மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று(பிப்.,21) கைது செய்துள்ளார்கள். கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள். கொள்ளையர்கள் கர்நாடகாவில் இருந்து அரியானாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவுள்ளார்கள். இதன்மூலம் போலீசார் கைது செய்த கொள்ளையர்களின் எண்ணிக்கை 4 ஆக தற்போது அதிகரித்துள்ளது. எஞ்சியுள்ள கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.