திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவர்களை விமானம் வழியே சென்னைக்கு அழைத்து வந்து, சாலை மார்க்கமாக திருவண்ணாமலை அழைத்து சென்றடைந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொள்ளையர்கள் நீதிமன்ற காவலில் 13நாட்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிறையில் உள்ள அந்த 2கைதிகளை 7நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கான அனுமதியினை அவர்கள் நீதிமன்றத்தில் கோரவுள்ளனர் என்றும் செய்திகள் வெளியானது.
மாடு திருடிய இருவரை காரில் வைத்து எரித்த பொதுமக்கள்
அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கு பதுக்கப்பட்டுள்ளது, இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விவரங்கள் வெளிவரும். இந்நிலையில் போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 2 கொள்ளையர்கள் ஹரியானாவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹரியானாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை கைதுசெய்ய முயற்சி எடுத்துவரும் நிலையில், தற்போது ஓர் புது சிக்கல் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. ஹரியானா ராஜஸ்தான் எல்லையில் மாடுகளை திருடிய 2பேரை பொதுமக்கள் காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் அவர்களை உடனடியாக கைதுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களை கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.