திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டோரை அழைத்து கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அதிகாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
ஆஜர்படுத்தப்பட்ட 2 கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்
இதனை தொடர்ந்து கைதான இந்த இரு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, விசாரணைக்காக திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகம் முன்னர் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளார்கள். அப்போது இந்த வழக்கு குறித்து கேட்டறிந்த நீதிபதி இந்த இரண்டு கொள்ளையர்களையும் 13 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.