புது திருமண தம்பதிகளுக்கு சிறப்பு சலுகையினை அறிவித்த திருப்பதி தேவஸ்தானம்
இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக எல்லா நாட்களிலும் திருப்பதி கோயில் கூட்டமாகவே காணப்படும். வி.ஐ.பி.தரிசனம், கட்டணம் செலுத்தி தரிசனம் உள்ளிட்ட பல தரிசன வழிவகைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் புது திருமணம் முடித்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தால் அவர்களது வாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. இதனால் புதுமணத்தம்பதிகளுக்கு தேவஸ்தானம் ஓர் சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் புதுமணத்தம்பதிகள் பங்கேற்கும் வண்ணம் சிறப்பு டிக்கெட்டுகளை ஒதுக்கியுள்ளது. அதன்படி இத்திருமஞ்சன சேவையில் பங்கேற்க புதுமண தம்பதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சிறப்பு டிக்கெட்டுகளை பெறுவதற்கு சில விதிமுறைகள் விதிப்பு
மேலும் இவ்வாறு ஒதுக்கப்படும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,000 என்றும், இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகளை பெற தம்பதிகள் முதலில் CRO அலுவலகத்திலுள்ள ஆர்ஜிதா சேவா லக்கி டிப் கவுண்டருக்கு சென்று தங்கள் ஆதார் கார்டுகள், திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் இச்சலுகையினை பெற திருமணம் முடிந்து ஒருவார காலத்திற்குள் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுமண தம்பதிகள் சிறப்பு ஹோம பூஜைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே அலிபிரியிலுள்ள ஹோ-மந்திர யாகச்சாலையில் வரும் 23ம்.,தேதி காலை 9 மணியளவில் நடக்கவுள்ள ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக சிறப்பு ஹோமத்தில் கணவன்-மனைவி பங்கேற்றால் சகல செளபாக்கியமும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.