திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துவருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அண்மையில் பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியானது. கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல், மரணத்தினை விளைவிக்கும் வகையில் ஆயுதம் கொண்டு தாக்குதல் போன்ற ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின்கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடி'க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.