திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமை காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்திற்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல்நிலைய பணிக்கும் மாற்றப்பட்டனர்.
2 புகார் மனுக்கள்
சித்திரவதை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு
இதனைதொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 30ம்தேதி கொல்கத்தாவை சேர்ந்த ஆசிஸ் என்னும் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.
அந்த மனு நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து தற்போது வி.கே.புரம் வேதநாராயணன் என்பவரது பல் பிடுங்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் மேலும் ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவரைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடந்த சித்திரவதை குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த 2 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.