திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துவருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் கல்லிடைக்குறிச்சி வி.கே.புரம் அம்பை காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சிசிடிவி பதிவுகளை கேட்ட நிலையில், 10,11,12 தேதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை. இதனை தொடர்ந்து தற்போது சம்பவத்தன்று சிசிடிவி காட்சிகள் ஏன் பதிவாகவில்லை என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
மனித உரிமை ஆணையமும் இது தொடர்பாக விசாரணை
மேலும் இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து தனியாக விசாரணையினை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமை காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்திற்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல்நிலைய பணிக்கும் மாற்றப்பட்டனர். தொடர்ந்து நேற்று(ஏப்ரல்.,5) மீண்டும் காவல் ஆய்வாளர்கள் எஸ்.சந்திரமோகன், பி.ராஜகுமாரி, எ.பெருமாள், அம்பை கோட்ட சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தலைமை காவலர் எம்.சந்தானகுமார், காவலர் வி.மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.