திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர்கள் எஸ்.சந்திரமோகன், பி.ராஜகுமாரி, எ.பெருமாள், அம்பை கோட்ட சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தலைமை காவலர் எம்.சந்தானகுமார், காவலர் வி.மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
பற்களை உடைத்து மிளகாய் பொடி தூவியதாக புகார்
இதனை தொடர்ந்து பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் புதிதாக காவல்துறையில் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர்களாக மகேஷ், சுஜி ஆனந்த், செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் மேலும் பேருக்கு பல் பிடுங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளிப்படையாக புகார் அளித்துள்ளார். அதில் அவர், தன் பல்லினை பல்வீர் சிங் கல்லால் அடித்து உடைத்ததோடு வாயில் ரத்தம் கொட்டிய இடத்தில் மிளகாய்ப்பொடி தூவியதாக புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.