திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து
திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத ரயில்கள் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கான செய்தி குறிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம். இந்த பெருமழை, வெள்ளம் காரணமாக செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் இடையேயான ரயில்வே தண்டவாளங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முன்பதிவில்லாத ரயிலும் ரத்து
தற்போது அதன் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே இயங்கும் அனைத்து முன்பதிவில்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முன்பதிவில்லாத 06667 ரயிலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. வாஞ்சிமணியாச்சி என்னும் பகுதியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலும் திருநெல்வேலி ஜங்க்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்
தொடர்ந்து, தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் சீரமைப்பு பணிகள் நிறைவுற்ற காரணத்தினால் வழக்கம் போல் இயக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, நேற்று(டிச.,21) சென்னையிலிருந்து கிளம்பிய முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி சென்றடைந்தது. மேலும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடக்கும் சீரமைப்பு பணி காரணமாக திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய ரயில் இன்று இரவு 9.35க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-பாலக்காடு செல்லும் ரயில் இன்று மதியம் 1.30 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.