
திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி மோசடி: கருவூல மேலாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேக குற்றவாளியாக கருதப்பட்ட கருவூல மேலாளர் நவீன் பொலினேனி மர்மமான சூழலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தற்கொலையா, கொலையா என்ற சந்தேகத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 37 வயதான நவீன், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையின் மாதவரம் பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார்.
மோசடி
பல கோடி ருபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
நிறுவனத்தில் ரூ.44.5 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்த நிலையில், நிறுவனம் நடத்திய உள்துறை விசாரணையில் நவீன் தவறை ஒப்புக்கொண்டதாகவும், அந்த பணத்தை தாய், சகோதரி மற்றும் நண்பர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி, பின்னர் மீண்டும் தன் கணக்கில் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் முதல் தவணையாக ரூ.5 கோடி நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தியிருந்தார்.
மரணம்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் காவல்துறையினர்
இந்நிலையில், புழலில் உள்ள நவீனின் சொந்த குடிசை வீட்டில், நவீன் பச்சை நயிலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் தற்கொலையாக இருக்கும் என சந்தேகித்த காவல்துறையினர், சடலத்தை மீட்கும் போது, அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கவனித்தனர். அதோடு அருகில் தூக்கில் ஏறுவதற்கான மேசை போன்ற பொருள் எதுவும் இல்லாததும், இது கொலையாக இருக்கும் என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
விசாரணை
நிறுவனத்தில் இருந்து மிரட்டல் விடப்பட்டதா என விசாரணை
நவீனை சந்தித்ததாக கூறப்படும் நிறுவன ஊழியர்கள் நரேஷ் மற்றும் குகுந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "நீ பணத்தை திருப்பிக் கொடுத்தாலும், உன்னை சிறைக்கு அனுப்புவோம்" என்று மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நவீன் தனது சகோதரி மற்றும் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், நிறுவனத்தில் உள்ள சிலர் மோசடி தொகையிலிருந்து 50% பங்கு கேட்டு மிரட்டியதாகக்கூறியுள்ளார். "போலீசில் புகார் அளிக்க வேண்டாம்; மூன்று மாதங்களில் மொத்த தொகையும் தந்து விடுகிறேன் எனக்கூறினேன். முதல் தவணையாக, 5 கோடி ரூபாயையும் தந்துவிட்டேன். நான் முழு தொகையும் கொடுத்தபின், ராஜினாமா செய்ய இருந்தேன். அதற்குள், திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் என்னை மிரட்டுகின்றனர். என் சாவுக்கு அவர்கள் தான் காரணம்" என எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கம்
காவல்துறையினரின் விளக்கம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், "மோசடி புகார் ஜூன் 24 அன்று கிடைத்தது. மனுதாரர் ஆதார ஆவணங்களை இன்னும் வழங்கவில்லை. நவீன் பொலினேனிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் முன் ஜாமீன் கோரியுள்ள வழக்கு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு நிலுவையில் உள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது, நவீன் அனுப்பிய மின்னஞ்சல், சம்பவ இடத்தில் காணப்படும் ஆதாரங்கள், மற்றும் முன்னெடுக்கப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றன. இது தற்கொலையா, திட்டமிட்டு நடந்த கொலையா என்பதற்கான முடிவுகள் முழுமையான விசாரணைக்குப் பிறகு மட்டுமே வெளிவரும்.