திருச்செந்தூர் 'கந்த சஷ்டி விழா' வரும் 13ம் தேதி துவக்கம்
அறுபடை வீடுகளுள் 2ம் படை வீடாக வழிபடப்படுவது திருச்செந்தூர் முருகன் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 'கந்த சஷ்டி விழா' கோலாகலமாக மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்று முருகனை வழிபட ஏராளமான மக்கள் ஒன்று கூடி பக்தி பரவசத்தில் திளைப்பர். அதன்படி இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா வரும் 13ம் தேதி துவங்கவுள்ளது. இந்த திருவிழாவில் யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வீரவாள்வகுப்பு, வேல்வகுப்பு உள்ளிட்ட பாடல்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க சண்முகவிலாசம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும். இதன் முக்கிய அம்சமான சூரசம்ஹார நிகழ்வு நவ.18ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.