Page Loader
அஜித்குமார் கொலை வழக்கு: வீடியோ பதிவு செய்த முக்கிய சாட்சி பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்
அஜித்குமார் மரண வழக்கு தற்போது CBI விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது

அஜித்குமார் கொலை வழக்கு: வீடியோ பதிவு செய்த முக்கிய சாட்சி பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2025
08:37 am

செய்தி முன்னோட்டம்

அஜித்குமார் மரணத்திற்கு காரணமான தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சி சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரணைக்கு அழைத்த அஜித்குமார், விசாரணையின் போது அடிபட்டதில் உயிரிழந்தது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரசியலிலும் அதிர்வலைகளை உருவாக்க, பல்வேறு அரசியல் காட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

விசாரணை 

DSP சஸ்பெண்ட் முதல் சிபிஐ விசாரணை வரை

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டு, மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தற்போது CBI விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இந்த வீடியோவை திருப்புவனம் கோயிலில் பணியாற்றும் சக்தீஸ்வரன் பதிவு செய்தது தெரியவந்தது. இவர், அந்த வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். சமீபத்தில், போலீசாருள் சிலர் ரவுடிகளுடன் இணைந்து தன்னை மிரட்டுவதாகக் கூறிய சக்தீஸ்வரன், தன் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், வழக்கின் விசாரணை முன்னேறும் போதிலும், முக்கிய சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.