
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரணம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 27), பத்ரகாளியம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். ஜூன் 27ஆம் தேதி, கோயிலுக்குள் வந்த பெண் பக்தரின் காரில் 10 பவுன் நகை திருடப்பட்டது குறித்து, மானாமதுரை சிறப்பு பிரிவு போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் நடந்த தாக்குதலின் விளைவாக, அஜித்குமார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை
வழக்கின் சார்பாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையின் போது அஜித்குமார் இறந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ், தற்போது கூடுதலாக சிவகங்கை மாவட்ட பொறுப்பையும் வகிக்கிறார்.
போராட்டம்
காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதற்கிடையே கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர், இன்று காலை திருப்புவனம் காவல் நிலையத்திற்கு முன்னால் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கலைக்க வேண்டி போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு காவல்துறை எந்தவித தாழ்வும் இல்லாமல், நியாயமான, வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன," எனக்கூறப்பட்டுள்ளது.