மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?
செய்தி முன்னோட்டம்
மதுரை அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி, இன்று திருமங்கலம் மற்றும் கப்பலூர் சிட்கோ பகுதியில் உள்ள கடைகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.
கிட்டத்தட்ட 2 ஆயிரம் கடைகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளன. விதிகள் படி, சுங்கச்சாவடி நகரின் எல்லையில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த சுங்கச்சாவடி 2கிமீ தொலைவிலேயே அமைந்திருப்பதால், உள்ளூர்வாசிகள் தினசரி பயன்பாட்டிற்கே டோல் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் தற்காலிகமாக கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக உள்ளது என மக்கள் ஆவேசத்துடன் பல முறை சுங்க சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் புறக்கணிப்பு
தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்த மக்கள்
பலமுறை மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும், நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டு, அனைத்து கடைகளிலும் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.
அப்போதும் இந்த நிலை நீடித்ததால், இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு தலைமையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன், முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால், கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளும் இயக்கப்படவில்லை.
அதோடு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.