பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்
நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் போது, திருக்கோவிலூர் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வழக்கால் பறிபோன எம்எல்ஏ பதவி
கடந்த 2006 - 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி செய்தபோது, உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிவகித்தார் பொன்முடி. அப்போது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதன் காரணமாக, பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்தே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.