எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது. இந்த இரு நிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. இந்த இணைப்பிற்கு பின், இரு நிறுவனங்களும் சேர்ந்த ஒட்டுமொத்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.18 லட்சம் கோடியாக இருக்கும். இந்த ஒருங்கிணைந்த நிறுவனமானது, 172 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன், உலகளவில் பங்குச்சந்தையில் அதிக சந்தைமதிப்பு கொண்ட நிதி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடிக்கவிருக்கிறது. JP மார்கன் சேஸ் & கோ, இன்டஸ்ட்ரியல் அண்டு கமர்சியல் பேங்க் ஆஃப் சைனா மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தைப் பிடிக்கவிருக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கியுடனான இணைப்பிற்குப் பின்:
ஒருங்கிணைந்த நிறுவனத்தின் மொத்த வணிக மதிப்பு, கடந்த மார்ச் 2023-ம் தேதி வரை ரூ.41 லட்சம் கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.4.14 லட்சம் கோடியாகவும், லாபம் ரூ.60,000 கோடியாகவும் இருக்கும். மேலும், வங்கிச் சேவைகளை மட்டும் வழங்கி வந்த எச்டிஎஃப்சி வங்கியானது, இந்த இணைப்புக்குப் பிறகு, இந்தியாவில் அனைத்து வகையான நிதிச் சேவைகளையும் வழங்கி வரும் ஒரு பெருநிறுவனமாக உருவெடுக்கவிருக்கிறது. இந்த இணைப்புக்குப் பிறகு, எச்டிஎஃப்சி செக்யூடிரிட்டீஸ், எச்பிடி ஃபைனான்சியஸ் சர்வீசஸ், எச்டிஎஃப்சி அசட் மேனேஜ்மெண்ட், எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்ஸூரன்ஸ், எச்டிஎஃப்சி கேபிடல் அட்வைசர்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் இன்ஸூரன்ஸ் ஆகிய துணைநிறுவனங்கள் எச்டிஎஃப்சி வங்கியின் கீழ் செயல்படவிருக்கின்றன.