திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொள்ளையடிக்க ஒரு வீட்டிற்கு நுழைந்து அந்த வீட்டின் மாடியில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த திருடனை நேற்று போலீசார் கைது செய்தனர். போலீஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்ததால், ACயை கண்டவுடன் அதை போட்டுவிட்டு நன்றாக தூங்கிவிட்டார். நேற்று அதிகாலை லக்னோவின் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடு வாரணாசியில் பணிபுரியும் டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்கு சொந்தமானதாகும். மேலும், சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்தனர். வீடு காலியாக இருப்பதை அறிந்துகொண்ட அந்த நபர் வீட்டின் முன் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார்.
குடிபோதையில் தலையணை வைத்து தூங்கிய திருடன்
அந்த வீட்டிற்குள் நுழைந்த அவர், ஏசியை பார்த்தவுடன் அதை போட்டுவிட்டு, அங்கே ஒரு தலையணையை தலையில் வைத்து படுத்துவிட்டார். அதிக குடிபோதையில் இருந்ததால் அவர் படுத்தவுடன் நன்கு தூங்கிவிட்டார். போலீசார் வரும் வரை எழுந்திருக்கவில்லை. இதற்கிடையில், வீட்டின் முன் கேட் திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அப்போது அவர் லக்னோவில் இல்லாததால் அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, அந்த நபர் ஏசியை ஆன் செய்துவிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போது போலீசார் எடுத்த திருடனின் புகைப்படம், வலது கையில் மொபைலை வைத்துக்கொண்டு அந்த திருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.