ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு
தமிழ்நாடு மாநிலம், ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று(ஏப்ரல்.,12) காலை நிலவரப்படி வினாடிக்கு 340 கன அடி நீர்வரத்து இருந்துள்ளது. 44.28 அடி உயரம் கொண்ட அணையில் 41.49 அடி நீர் இருப்பு இருப்பதால், வரத்தான 340 கன அடி நீரும் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுகிறது. கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து தென்பெண்ணையாற்றில் 340 கன அடி நீர்வரத்து செல்லும் நிலையில் தினமும் அந்த ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. அதன்படி வழக்கத்தை விட, நேற்று(ஏப்ரல்.,12) காலை முதல் இந்த நுரை அதிகமாகியுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் நீரில் அதிகளவு ரசாயனம் கலக்கப்பட்டு வருவதால் இவ்வாறு நுரைகள் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
காற்றில் பறக்கும் ரசாயன நுரையால் பயிர்கள் பாதிக்கக்கூடும்
இந்நிலையில் நேற்று ஆற்றில் நீர் செல்வது கூட தெரியாத அளவிற்கு ரசாயன நுரை மலை போல் ஆற்றில் தேங்கியுள்ளது. இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள விளை நிலங்கள் மீது விழுகிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேங்கி நிற்கும் ரசாயன நுரையால் ஏற்படும் துர்நாற்றத்தால் கரையோரம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். எனினும் இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ இதனை நேரில் வந்து ஆய்வினை மேற்கொள்ளவில்லை. இச்செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.