கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக கட்டுமானம் செய்யவும் மரங்களை வெட்டவும் அனுமதித்த உத்தரகாண்ட் முன்னாள் வனத்துறை அமைச்சர் ஹரக்சிங் ராவத் மற்றும் முன்னாள் பிரதேச வன அதிகாரி கிஷன் சந்த் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் சிபிஐ 3 மாதங்களுக்குள் அதன் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, "அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் நம்பிக்கையை குப்பைத் தொட்டியில் வீசிய ஒரு வழக்கு இது" என்று கூறியுள்ளது.
"அவர்கள் சட்டத்தை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர். வணிக நோக்கங்களுக்காக சுற்றுலாவை மேம்படுத்த கட்டிடங்களை கட்டுவதற்கு பெருமளவில் மரங்களை வெட்டி இருக்கின்றனர்" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
தேசியப் பூங்காக்களில் சஃபாரிகளை அனுமதிக்கலாமா என்பதை ஆய்வு செய்ய குழு
ராவத் மற்றும் சந்த் ஆகியோர் சட்டப்பூர்வ விதிகளை மீறியதில் அவர்களுக்கு இருந்த துணிச்சலைக் கண்டு வியப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"இந்த வழக்கில், அப்போதைய வனத்துறை அமைச்சர் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதினார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது, மேலும் திரு. கிஷன் சந்த் பொது நம்பிக்கைக் கோட்பாட்டை எப்படி காற்றில் பறக்கவிட்டார் என்பதையும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது." என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால், இதை சிபிஐ விசாரித்து வருவதால், நாங்கள் தற்போது எதுவும் கூறவிரும்பவில்லை.
நாட்டிலுள்ள தேசியப் பூங்காக்களில் சஃபாரிகளை அனுமதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக ஒரு குழுவையும் நீதிமன்றம் அமைத்துள்ளது.