Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் கட்டம் - III பணிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன. சிப்காட் சர்ச்சையின் வரலாறு: ஒரு வருடத்திற்கும் மேலாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் நகருக்கு அருகில், தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) கட்டம்-III விரிவாக்க பணிக்காக அடையாளம் காணப்பட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்கள், நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த கிராமங்களில் மேல்மா, நர்மபள்ளம், குரும்பூர், தேத்துறை, நெடுங்கல், அதி, வட அழபிராந்தன், வீரபாக்கம், லியனற்குன்றம் ஆகியவை அடங்கும்.
செய்யாறு சிப்காட் எப்போது தொடங்கப்பட்டது?
கடந்த 1995 ஆம் ஆண்டு சிப்காட், மங்கல், செல்லப்பெரும்புலிமேடு மற்றும் மாத்தூர் கிராமங்களில் நிறுவனங்களை அமைக்க 645 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது. இருப்பினும், சிப்காட் கைப்பற்றிய நிலங்கள் 2006 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளில் 364 ஏக்கர் நிலம், பல்வேறு நிறுவனங்களுக்கு பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட, சென்னை-ராணிப்பேட்டை-ஓசூர் தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதி செய்யாறு தொழில்துறை வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிப்காட்டால் எத்தனை நபர்கள் பயன் பெறுகிறார்கள்?
தற்போது 13 நிறுவனங்கள் அந்த வளாகத்தில் இயங்கி வரும் நிலையில், இதன் மூலம் 27,432 பேர் நேரடியாகவும், 75,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் உள்ளூர் வாசிகள். ஒரு தசாப்தத்திற்கு முன்னர், சிப்காட் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, 2,300 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த வளாகத்தில் 55 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இதன் மூலம், 31,645 பேர் நேரடியாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
இதன் தொடர்ச்சியாகவே சிப்காட் மூன்றாம் கட்ட பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் உள்ளூர் குடியிருப்பு வாசிகள் போராட்டத்தை தொடங்கினர். அனக்காவூர் காவல்துறையினர், பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் போராட்டத்தை ஒருங்கிணைத்த 20 பேரை கைது செய்தது பிரச்சனை பூதாகரமாக வெடிக்க காரணமானது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 294 (B), 341, 353, 506 (1) மற்றும் பொது சொத்து சட்டம் 1984 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூலை 2 ஆம் தேதி முதல், இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது
மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தின் (எம்கேஎஸ்எஸ்) சமூக ஆர்வலர் அருணா ராய் தலைமையில், பலர் நவம்பர் 14 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், நிலைமையை மிகவும் மோசமாக்கும் வகையில், நவம்பர் 16 ஆம் தேதி மாவட்ட எஸ்பி கார்த்திகேயனின் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கைது செய்யப்பட்ட 7 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின், 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இருப்பினும், 20 நபர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிப்காட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
சிப்காட்டும், தமிழ்நாடு அரசும் மூன்றாவது கட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை தொழில் வளர்ச்சிக்கு அவசியமானதாக பார்க்கிறார்கள். முன்மொழியப்பட்டுள்ள திட்டம், அப்பகுதியில் படித்த பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் என அரசு தெரிவிக்கிறது. மூன்றாவது கட்ட பணிகளுக்காக கையகப்படுத்தப்பட உள்ள 3,174 ஏக்கரில், 7 ஏக்கர் மட்டுமே சாகுபடிக்கு உகந்த நிலம் எனவும், மற்ற நிலங்கள் புறம்போக்கு எனவும் அரசு வாதிடுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள 1,881 நில உரிமையாளர்களில் வெறும், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே, இத்திட்டத்திற்கு எழுத்து வாயிலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசு கூறுகிறது.
நில உரிமையாளர்களின் கருத்து என்ன?
சிப்காட் விரிவாக்க பணிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்கள், அந்நிலத்தில் நெல், நிலக்கடலை, கரும்பு, வாழை, தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் அவர்கள், போதிய இழப்பீடு வழங்கப்படாத பட்சத்தில், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான வேலுவும், சிப்காட்டும், நில உரிமையாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளனர். பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்பிற்கும் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர்.
சிப்காட் விவகாரத்திற்கு தீர்வு என்ன?
உள்ளூர் சமூக போராளிகள், விவசாயக் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், சிப்காட் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளில் ஒருவர் இன்னும் குண்டாஸில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மையான நில உடமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் மக்களின் நம்பிக்கையை பெற, அவர்களுக்கு சிப்காட்டில் நிரந்தர வேலை வழங்குவது குறித்த கேள்விக்கு, தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.